CBI தொடர்ந்த வழக்கில் முன்னாள் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை...!
குடியமர்வு சான்றிதழ்களை வழங்குவதற்குப் பல்வேறு வேலைவாய்ப்பு ஏஜெண்டுகளிடமிருந்து லஞ்சம் பெற்ற வழக்கில்முன்னாள் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலரான ஆர்.சேகருக்கு (ஐ.ஆர்.எஸ்) ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், வேலைவாய்ப்பு ஏஜெண்ட் அன்வர் உசேனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.18,000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், முன்னாள் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் ஆர்.சேகர், தனியார் வேலைவாய்ப்பு ஏஜெண்ட் அன்வர் உசேன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஒரு சதியில் ஈடுபட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக, அன்வர் உசேன், புலம்பெயர்ந்தோர் சான்றிதழ்களை வழங்குவதற்காக பல்வேறு வேலைவாய்ப்பு ஏஜெண்டுகளிடமிருந்து 'ஸ்பீட் மணி' வடிவில் லஞ்சத் தொகையை வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த லஞ்சத் தொகையை அப்போதைய புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் மற்றும் ஏனைய அரசு ஊழியர்களிடமும் கொடுத்தனர். சேகர் தனது மகனுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்வதற்காக லஞ்சத் தொகையில் இருந்து ரூ.13 லட்சம் வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த தொகை மீட்கப்பட்டது.விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் கண்டறிந்து அவர்களை குற்றவாளிகளாக அறிவித்தது.