மீண்டும் அமைச்சராக பதவியேற்கிறார் செந்தில் பாலாஜி..? சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய நிபந்தனைகள்..!!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகள் என்னென்ன..?
செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும். விசாரணை கைதியாகவே இருப்பதால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சத்துக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி..?
தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞரான என்.ஆர் இளங்கோ, ”செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற எந்த தடையும் இல்லை” என தெரிவித்துள்ளார். எனவே, அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்..!! இனி உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்கப்போகுது..!!