மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி..!! மீண்டும் சிறையில் அடைப்பு..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். இவர், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் பணி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்ற நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வும், ஜாமீன் கோரியும் நீதிமன்றங்களை நாடியும் எந்த பலனும் இல்லை. தற்போது அவரது நீதிமன்ற காவல் 49-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அவருக்கு பரிசோதனையுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இன்று செந்தில் பாலாஜியின் உடல்நலம் என்பது சீரானது. இதையடுத்து செந்தி்ல் பாலாஜியிடம், ‛‛உங்களின் உடல்நலம் சீராகி உள்ளது. உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? பிரச்சனை இல்லையென்றால் டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம்'' என தெரிவித்தனர். இதை கேட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆகி கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Read More : 4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு..!! 6.3 லட்சம் பேர் உயிரிழப்பு..!! ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!