அடி மேல் அடி...! பொன்முடிக்கு சிக்கல்...! 2-ம் தேதி விசாரணைக்கு வரும் செம்மண் குவாரி முறைகேடு வழக்கு...!
முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரத்தில் செம்மண் குவாரியில் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி உட்பட 8 போ் மீது 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் உயிரிழந்து விட்டாா்.
நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா். மற்ற 4 பேரும் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்குமாறு கூறியிருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயக்குமாா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட பூா்ணிமா உத்தரவிட்டாா்.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.