செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு..!! சென்னை மக்களுக்கு பாதிப்பா..? மாவட்ட ஆட்சியர் தகவல்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 12,000 கன அடி வரை நீர் திறந்தாலும், சென்னைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான, செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரியில் தற்போது 22.41 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணை மொத்த கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீர்வரத்திற்கு ஏற்ப நீர் திறப்பு இருந்து வருகிறது. ஏரியின் நிலவரம் குறித்து உடனுக்குடன் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரது அறிவுறுத்தலுடன் செயல்பட்டு வருகிறோம்.
அடையாறு ஆற்றின் கரைகள் கடந்த சில ஆண்டுகளில் தூர்வாரி தயார் நிலையில் உள்ளது. ஏரியில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டாலும் சென்னைக்கு பிரச்சனை இருக்காது. ஏரியை பார்வையிட வருபவர்கள் ஏரிக்குள் இறங்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.