செம குட் நியூஸ்..!! புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்..!! வருகிறது புதிய நடைமுறை..!! CBSE அதிரடி..!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்தாண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளின்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை பரிசீலித்து வருகிறது. மாணவர்கள் அத்தகைய தேர்வுகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பள்ளிகளின் கருத்துக்களை அறிய 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கும் மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கும் ஒரு சில பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை இந்தாண்டு இறுதியில் நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.
புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வுகள், புத்தகங்கள் இல்லாத தேர்வுகளை விட எளிதானவை அல்ல. பெரும்பாலும் அவை மிகவும் சவாலானவை. ஏனென்றால், புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வு ஒரு மாணவரின் நினைவாற்றலை மதிப்பிடாது. ஆனால், ஒரு பாடத்தைப் பற்றிய மாணவரது புரிதல் மற்றும் கருத்துக்களை பகுப்பாய்வு செய்யும் அல்லது பயன்படுத்துவதற்கான திறனை மதிப்பிடுகிறது. இது ஒரு பாடப்புத்தகத்தில் இருந்து விடைத்தாளில் உள்ள உள்ளடக்கத்தை வெறுமனே எழுதுவது மட்டுமல்ல.
இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் சோதனை தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனுபவத்தின் அடிப்படையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிலும் இந்த மாதிரி மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்பதை சி.பி.எஸ்.இ வாரியம் முடிவு செய்யும்.
English Summary : CBSE’s open book exam plan