இந்தியாவில் 2027-ம் ஆண்டுக்குள் இது கட்டாயம் நடக்கும்...! மத்திய அமைச்சர் தகவல்...!
2027-ம் ஆண்டுக்குள் துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகள் உற்பத்தியில் தன்னிறைவை அடைய மத்திய அரசு நடவடிக்கை.
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி, மாற்றுப்பயிர் சாகுபடியை உறுதி செய்ய ஏதுவாக, துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்புகளை குறைந்தப்பட்ச ஆதரவு விலை அடிப்படையில் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காணொலி வாயிலாக பல்வேறு மாநில வேளாண் அமைச்சர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அவர், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பருப்பு 100 சதவீத அளவிற்கு கொள்முதல் செய்யப்படும் என்றார். தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக இ-சம்ரிதி இணையதளத்தில் பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து பருப்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாசிப்பயிறு மற்றும் கொண்டைக்கடலை உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், 2027-ம் ஆண்டுக்குள் துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகள் உற்பத்தியில் தன்னிறைவை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.