WhatsApp: இனி தேதி வாரியாக மெசேஜ்களை தேடும் வசதி .! மெட்டாவின் புதிய அப்டேட்.!
WhatsApp: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், தனிநபர் மற்றும் குரூப் சாட் களில் தேதி வாரியாக மெசேஜ்களை தேடும் வசதியை ஆண்ட்ராய்டு(Android) ஆபரேட்டிங் சிஸ்டத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மெட்டா(Meta) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனலில் இந்த அறிவிப்பை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்திருக்கும் அவர் " உங்கள் வாட்ஸ்அப் சாட்டில் தேதிகள் மூலமாக மெசேஜ்களை தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் செய்திகள் தேடுவது எளிமையாக்கப்பட்டு இருப்பதோடு உங்கள் நேரம் விரயம் ஆவதும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நபர் அல்லது குழுவிற்கு அனுப்பிய மெசேஜில் குறிப்பிட்ட தேதியில் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெசேஜை தேட விரும்பினால் தேடுதல் ஆப்ஷனில் சென்று குறிப்பிட்ட தேதியை உள்ளீடு செய்து தேடுதல் பட்டனை ஓகே செய்தால் போதும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த வசதி ஏற்கனவே ஐ ஓ எஸ் மற்றும் வாட்ஸ்அப் வெப் டெஸ்க்டாப் வெர்ஷன் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஒழுங்குப்படுத்தி அனுப்புவதற்கான நம்பர் லிஸ்ட் இன்லைன் கோட் புல்லட் லிஸ்ட் மற்றும் பிளாக் மேற்கோள்கள் போன்றவற்றை உள்ளடக்கிய அப்டேட் வெளியிடப்பட்டது. மேலும் புதியதாக விருப்பமான காண்டாக்ட்களை ஃபில்டர் செய்யும் அம்சத்தில் செயலாற்றி வருவதாக தெரிவித்திருக்கிறது. இதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது .
இதன் மூலம் பயனர்கள் தங்கள் சாட்களில் முன்னுரிமை அளிக்கும் வசதியை வழங்க இருக்கிறது. மேலும் செய்தி அனுபவத்தில் அதிக கட்டுப்பாட்டையும் செயல் திறனையும் வழங்குகிறது. இந்த புதிய அப்டேட்டில் விருப்பமான காண்டாக்டுகளை ஃபில்டர் செய்து வைத்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.