மண்டைய பிளக்கும் வெயில் - என்னென்ன பானங்களை அருந்தலாம்?
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். உடலை அதீத வெப்ப நிலைக்கு விடக்கூடாது. தண்ணீர் அருந்தாமல் வேலை பார்த்தால் உடலில் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிப்பதற்கும், உடலைச் சீராக வைத்துக்கொள்வதற்கும் ஏற்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. வெயில் காலத்தில் வியர்வை மூலம் நீர் அதிக அளவு வெளியேறும் என்பதால், உடல் வெகுவாகச் சோர்வடையும். உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், சரும பிரச்னைகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க உதவும் எளிய உணவு முறைகள் குறித்து பார்க்கலாம்
நீர் ஆகாரம்: வெப்பத்தின் காரணமாக அதிக அளவில் வெளியேறும் நீர் இழப்பைச் சமாளிக்க நிறையக் குடிநீர் குடிப்பது அவசியம். எங்கே சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கோடையில் நம் உடல்நிலை சீராக இருக்கும். பொதுவாக, வியர்வையின் காரணமாக, நம் உடலின் நீரின் அளவு மட்டும் குறைவது இல்லை; எலெக்டரோலைட்ஸ், சோடியம், பொடாசியம் போன்றவற்றின் அளவும் சேர்ந்தே குறையத் தொடங்கும். இளநீரில் அதிக அளவு பொடாசியம் இருப்பதால், இதைத் தவிர்ப்பதற்கு இளநீர் அருந்துவது உதவும். எலுமிச்சை ஜுஸ் போதுமான அளவு அருந்துவது வைட்டமின் சி அளவை உடலில் மேம்படுத்தும். இந்த ஜூஸில் புதினா, துளசி போன்றவற்றைக் கலந்து குடிக்கலாம். இவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருப்பதால், வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று நோயை அது தவிர்க்க உதவும். இத்துடன், நீர்மோர் அருந்துவது உடல் வெப்பநிலையைச் சீர்படுத்தும்.
கோடையில் இந்த உணவை சாப்பிடாதீங்க!! காபியும் தேநீரும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் இயல்பு கொண்டவை என்பதால், கோடைக்காலத்தில் காபி, தேநீர் போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இவற்றுக்கு மாற்றாக கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் எதிர்ப்பாற்றல் அதிகம் என்பதால், அது உடல் நிலையைச் சீராக வைத்துக்கொள்வதோடு சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுக்குள் கொண்டுவரும். முக்கியமாக, குளிர்பானங்கள், சோடா போன்றவற்றைத் தவிர்த்து பழச்சாறு அருந்துவது நல்லது.
கோடையில் என்ன உணவு வகைகள் சாப்பிடலாம்? கோடைக்காலத்திலும் வழக்கம் போல அரிசி, சப்பாத்தி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் முடிந்த அளவு மோர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. உணவில் போதிய அளவு நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கள் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் ராகி உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால், கோடையில் அதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, முழு பருப்பு வகைகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.
Read More: சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்.. வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் காயம்.. ஆர்டர் போட்டும் கேக்கலையே!