மக்களே உஷார்..!! கிலோ கணக்கில் காலாவதியான நூடுல்ஸ்..!! அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்..!!
இந்த காலகட்டத்தில் மொபைல் தான் எல்லாம் என்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஆறாவது விரல் போல செல்போன் மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாமே இப்போது ஆன்லைனில் செய்ய முடிகிறது. அதன்படி, இப்போது ஆர்டர் செய்தால், 10 நிமிடத்தில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் செயலிகள் அதிகரித்துள்ளது. தேவைப்படும் பொருட்கள் உடனே வீட்டிற்கே வருவதால், இதைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது சில நேரம் அது நமக்கு ஆபத்தாக மாறக்கூடும். அந்த வகையில், திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ் (வயது 15). இவர், தனியார்ப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், அடிக்கடி கடைகளில் நூடுல்ஸ் வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி தான், சனிக்கிழமை இரவு அவர் வழக்கம்போல் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். அது சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை.
குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சைனா நூடுல்ஸ் மொத்த வியாபாரிகளின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில், 800 கிலோ காலாவதியாக நூடுல்ஸ் கைப்பற்றப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.