மாணவர்களுக்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு...!
2023-2024 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி கல்வி பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உதவித்தொகையானது சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் வழங்கிடும் வகையில் கீழ்காணும் விவரங்களின் அடிப்படையில் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகையானது ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,000/- முதல் ரூ.75,000 வரை கல்வி தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. இவ்வுதவித்தொகையானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை பெற கீழ்காணும் தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் 12ஆம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தற்போது கல்வி ஆண்டில் (2023-2024) முதலாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இதில் குறைந்தபட்சம் 60% சதவீதம் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கு கீழ் இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறன் சதவீதமானது 40% மேல் இருத்தல் வேண்டும். மேற்காணும் தகுதிகள் பெற்றிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் 31.01.2024-க்குள் www.vidyadhan.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இக்கல்வி உதவித்தொகை குறித்தான விபரங்களுக்கு இணையதளம் மற்றும் முகவரியை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.