விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம்...! தமிழகத்தில் 46 லட்சம் பேர் பயன்...!
பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை குறித்து சென்னையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சிறு குறு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகளுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா, ஜல் சக்தி இயக்கம், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம், விபத்துக் காப்பீட்டுத் திட்டம், முத்ரா திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உட்பட மத்திய அரசின் 14 திட்டங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த யாத்திரை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தற்போது நீலகிரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த யாத்திரை நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 130 வாகனங்கள் மூலம் நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இந்த விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மக்களிடம் தகவலைத் தெரிவிப்பது அதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த யாத்திரையின் நோக்கம். பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருவதாக குறிப்பிட்டார்.