Tn Govt: 21 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம்...!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசின் விலையில்லா சாதாரண தொழில் கருவிகள் வழங்குதல் திட்டத்தின் கீழ் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கிடும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற சேலம் மாவட்டத்தை சார்ந்தவராகவும், சேலம் மாவட்டத்திலேயே வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும் மற்றும் வயது வரம்பு 21 முதல் 45 வயது வரை உள்ள இந்து - புதிரை வண்ணார் அல்லது ஆதிதிராவிடர் (Sc) இனத்தினைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சலவை தொழில் புரிதலுக்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
மேற்படி திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் மேற்காணும் சான்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இருப்பிட சான்று நகலுடன் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண்.109-இல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.