”SAVE அரிட்டாப்பட்டி”..!! பாலமேடு ஜல்லிக்கட்டில் எதிரொலித்த டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு போஸ்டர்..!!
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக் கோரி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர், மேடையில் பதாகையை ஏந்தியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி 7 ஆம் தேதி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால், தடையை மீறி பேரணியாக சென்ற விவசாயிகளை காவல்துறையினா் வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி , ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்த முயன்றனா். இருப்பினும், தடையை மீறி பேரணியைத் தொடா்ந்து வந்த அவா்கள் தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக சுமாா் 5 ஆயிரம் போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணவந்த பார்வையாளர், டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக் கோரி பதாகைகளை பிடித்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.