For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீபாவளி போனஸ்... தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்..! நடவடிக்கை எடுக்க தவறிய CM ஸ்டாலின்.. டிடிவி குற்றச்சாட்டு

08:40 AM Oct 25, 2024 IST | Vignesh
தீபாவளி போனஸ்     தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்    நடவடிக்கை எடுக்க தவறிய cm ஸ்டாலின்   டிடிவி குற்றச்சாட்டு
Advertisement

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் அருகில் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என அம்மா முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப்பணியாளர்கள் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மாநிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு, பகல் பாராமல் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கூட வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நிரந்தர பணி பாதுகாப்பின்றியும், போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றியும் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு அருகில் அமர்ந்து உணவருந்துவது போன்ற புகைப்படங்களை எடுத்துக் கொள்வது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட எந்த வகையிலும் உதவாது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட முறையாக நிறைவேற்ற முன்வரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதோடு, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement