சம்பல் மசூதி கலவரம் பாஜக போட்ட பிளான்.. தேர்தல் முறைகேடுகளை திசைதிருப்பவே இந்த வன்முறை..!! - அகிலேஷ் யாதவ்
உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதி இந்து கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது, இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி பகுதியில் இன்று திரண்டு அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அரசு அதிகாரிகள் வந்த வாகனம் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. இதனால் சம்பல் ஷாஜி ஜமா மசூதி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பேசியுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "சம்பலில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து விவாதங்கள் நடைபெறாமல் திசைதிருப்ப ஆய்வுக் குழுவினரை இன்று காலை வேண்டுமென்றே அங்கு அனுப்பி குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் எதற்காக காலை நேரத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி மீண்டும் ஆய்வு செய்ய வந்தனர்? அங்கு நடைபெற்ற வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
நான் எந்த சட்ட நடைமுறைகளுக்குள்ளும் செல்லவில்லை. ஆனால், இதன் மற்றொரு பக்கம் குறித்து பேசப்படாமலே உள்ளது. சம்பலில் நடந்த வன்முறை சம்பவம் தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாஜகவால் தூண்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும், மீதமுள்ள 7 இடங்களில் பாஜக கூட்டணியும் வெற்றி பெற்றன.
இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்குப்பதிவு நாளில், சமாஜ்வாடி கட்சியின் அனைத்து பூத் ஏஜெண்டுகள் மற்றும் வாக்களிக்க விரும்பிய சமாஜ்வாடி கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர். வாக்களிக்க விடாமல் அவர்களைத் தடுத்து அவர்களின் வாக்குகளை யார் பதிவு செய்தது? சமாஜ்வாடி கட்சி வாக்குகள் வாக்குச் சாவடிகளில் பதிவாகவில்லை" என்று அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
Read more ; சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி.. திணறும் ஆஸ்திரேலியா