தடையை மீறி 'SMOKE BISCUIT' விற்பனை! உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்த அதிகாரிகள்!
மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யும் கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அண்மையில் ஒரு சிறுவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை உண்டு கடும் வயிற்று வலியில் அலறித் துடித்து மயங்கிய காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஸ்மோக் பிஸ்கட் விற்பனைக்கு தடை விதித்தது. மேலும், உணவுப்பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, மதுரை முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று மதியம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.