தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா...? உடனே இந்த வாட்ஸ் அப் எண்ணில் புகார் செய்ய வேண்டும்...!
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முதல் 1459 உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு 74 உணவு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்(Hans), கூல்லிப் (Coollip), V-1 புகையிலை, ஸ்வாகத் (Swagat) புகையிலை போன்றவை விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 272.530 கிலோ பறி முதல் செய்யப்பட்டு 73 கடைகளும் (1-வீடு) மூடப்பட்டுள்ளது. ரூ.22,05,000 அபராதம் விதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் அபராத தொகையினை அரசு கணக்கு தலைப்பில் செலுத்தியுள்ளார்கள். மேலும் இக்கடை உரிமையாளர்களிடம் இனிவரும் காலங்களில் விற்பனை செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி கடிதமும் பெறப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் வீட்டருகே இவ்வாறாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு துறை 94440 42322 வாட்ஸ் ஆப் (Whatsapp) என்ற எண்ணிற்கும் காவல்துறையின் வாட்ஸ் ஆப் (Whatsapp) எண்கள் 94984 10581, 82489 86885 என்ற எண்களுக்கும் தெரிவிக்கும்மாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.