பாதுகாப்பு முக்கியம்..!! கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவு தான்..!! குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது உஷாரா இருங்க..!!
தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதே நேரத்தில் பட்டாசுகளை கவனமாக கையாளாவிட்டால், விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தீபாவளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்கான முன் தயாரிப்புகள் கடந்த வாரமே துவங்கிவிட்டது. திடீர் திடீரென முளைத்த பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நகரப் பகுதிகளில் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகளை வாங்கிச் செல்கின்றனர்.
பட்டாசு என்பது தீபாவளியின் ஒரு முக்கிய அங்கம். பட்டாசுகள் வெடித்து சிதறும் போது குழந்தைகள் ஆனாலும் பெரியவர்கள் ஆனாலும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பட்டாசுகளை மிக கவனமாக வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நைலான், பட்டு உள்ளிட்ட உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். தரையில் படும்படியான உடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. அவற்றில் உடனடியாக தீப்பற்றும் என்பதோடு காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.
இதன் காரணமாக பருத்தி ஆடைகள் சுடிதார், ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்டவற்றை அணியலாம். பட்டாசு வெடிக்கும் போது ஒரே இடத்தில் மொத்தமாக பட்டாசுகளை வைக்கக் கூடாது. பட்டாசுகளில் இருந்து கிளம்பும் தீப்பொறி பட்டாசு பெட்டியில் பற்றி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பாக பட்டாசுகளை ஓரிடத்தில் வைத்து விட்டு சற்று தள்ளியே வெடிக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிப்பதாக இருந்தால் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட ஃபேன்சி ரக பட்டாசுகளை மட்டுமே வெடிக்க கொடுக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும்.
பட்டாசுகளை மது பாட்டில்கள், கண்ணாடி குவளைகள், இரும்பு பெட்டிகள் உள்ளிட்டவற்றில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு மிக அருகில் பட்டாசுகள் வெடிப்பதையும், குடிசைகள் இருக்கும் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பற்ற வைத்த பட்டாசுகள் வெடிக்கவில்லை என்றால் அவற்றை கையில் தொடக் கூடாது. தண்ணீர் ஊற்றி அணைத்து தூக்கி எறிய வேண்டும். மேலும், பட்டாசுகளை எப்படி வெடிப்பது என முறையாக தெரிந்து கொண்ட பின்பே அதனை கையாள வேண்டும்.
சங்கு சக்கரங்கள், பூந்தொட்டிகள் ஆகியவற்றை கையில் பிடிப்பதையோ காலால் எட்டி உதைப்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சில சமயங்களில் அது வெடிக்கக் கூடும். பட்டாசுகள் வெடிக்கும் போது இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கம்பி மத்தாப்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போது அருகில் வாளியில் தண்ணீர் நிரப்பி அல்லது மணலை வைத்துவது நல்லது. கம்பி மத்தாப்பை தூக்கி எறியும் போது கம்பிகள் சூடாக இருக்கும். இது குழந்தைகளின் கால்களில் பட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பட்டாசுகளுக்கு மிக அருகில் முகத்தையோ கைகளையோ கொண்டு செல்லக்கூடாது. குறிப்பாக, குழந்தைகள் பெரியவர்கள் கம்பி மத்தாப்பு உள்ளிட்டவற்றை வெடிக்கும் போது கண்ணாடி உள்ளிட்டவற்றை அணிந்து கொள்வது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது அருகில் முதலுதவி பெட்டி, பருத்தி துணி, தண்ணீர் வாளி ஆகியவற்றை வைத்துக்கொண்டு வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது கால்நடைகள் வளர்ப்பு பிராணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பட்டாசு சத்தத்தால் அவைகள் மிரளும்போது வேறு விதமான பிரச்சனைகளும் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே பட்டாசுகளை கையாளும்போது பாதுகாப்பாக இருந்தால் மகிழ்ச்சியான தீபாவளி பாதுகாப்பான தீபாவளியாக இருக்கும்.
Read More : கவலையை விடுங்க..!! இனி ஈசியா உங்கள் பற்களை அழகாக மாற்றலாம்..!! வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!!