'வாழை என்னுடையது கதை' பரபரப்பை கிளப்பிய எழுத்தாளர்..!! மாரி செல்வராஜின் நச் பதில்..!!
வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை.
என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை எழுதியதை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள சோ.தர்மன், வாழை தன்னை வாழ வைக்கவில்லை எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், வாழை திரைப்படத்தின் கதையை தான் ஏற்கெனவே சிறுகதையாக எழுதி விட்டதாகவும் அதை படமாக எடுக்க யாரும் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான சோ.தர்மன் கூறியுள்ளார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில், 'வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் 'வாழையடி' என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி' என்று பதிவிட்டு 'வாழையடி...' சிறுகதையின் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.