ருதுராஜ் தேர்வு சர்ச்சை!. பிசிசிஐ-யின் மாஸ்டர் பிளான்!. காத்திருக்கும் பெரிய வாய்ப்பு!. வெளியான முக்கிய தகவல்!
Ruturaj Gaikwad: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு தயார்படுத்துவதற்காகவே, வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது தொடர் இதுவாகும். இதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் துவங்க உள்ள அந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோருக்கு இடம் கிடைக்காது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. அதே போல ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்படாததால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக கடந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி அசத்திய அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல இஷான் கிசான் கழற்றி விடப்பட்டு விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, ரியன் பராக், ரிங்கு சிங், கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் அசத்திய நித்திஷ் ரெட்டி, சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ஸ்பின்னர்களாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் சக்கரவர்த்தி 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் சுமார் 3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்துள்ளார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு உதவிய அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொண்டு வந்துள்ளார் என்றே சொல்லலாம். ஆனால் இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால், ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு தயார்படுத்துவதற்காகவே வங்காளதேசத்திற்கு எதிரான T20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களுக்கு காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் முக்கியமான தொடருக்கு அவர் மூன்றாவது தொடக்க வீரராக தயாராக இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
அதன் காரணமாகவே அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். தற்போது அவர் இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இந்த போட்டி முடிந்த பின் அவர் மீண்டும் உள்ளூர் தொடரான ரஞ்சி டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கும் அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கும் பட்சத்தில் அவருக்கு அதிக போட்டி அனுபவம் இருக்க வேண்டும். தற்போது அவரை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் மாற்று வீரராக தேர்வு செய்தால் அவர் போட்டியில் விளையாடி இருக்க மாட்டார். அதனால், அதே சமயம் அவர் இந்த காலகட்டத்தில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அவர் தொடர்ந்து ஃபார்மில் இருக்க அந்த அனுபவம் உதவும். எனவே, தொலைநோக்கு பார்வையுடன் ருதுராஜ் உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்கப்பட்டிருக்கிறார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.