ரூ.60,000 கோடி..!! அந்த ஆடியோவை வெளியிட்டால் 10 நிமிடத்தில் பதவி இருக்காது..!! துரைமுருகனுக்கு எச்சரிக்கை..!!
அமைச்சர் துரைமுருகன், மணல் விவகாரத்தில் 60,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும், இதுதொடர்பான உண்மைகளை வெளியிட்டால் அவர் பதவி, 10 நிமிடத்தில் இருக்காது எனவும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள குடியாத்தம் குமரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் உத்தரவிட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதன் காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவான வார்த்தைகளால் குடியாத்தம் குமரன் திட்டி பேசினார். மேலும், நடிகை விந்தியா குறித்தும் இழிவாக பேசியதால், குமரன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், தன் குடும்பத்தை பழிவாங்க துடிப்பதாகவும், துரைமுருகனும் கட்சியிலிருந்து தன்னை நீக்கப் பார்ப்பதாகவும், இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், குமரன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கம் குறித்த அறிவிப்பு வந்தவுடன் துரைமுருகன் குறித்தும், அவரது மகன் கதிர் ஆனந்த் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ ஒன்றை குடியாத்தம் குமரன் வெளியிட்டுள்ளார். அதில், ”எனக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கதிர் ஆனந்த் தான் இந்த மாவட்டத்துக்கே பிரச்சனை. சேர்மன் தேர்தலில் திமுகவை எதிர்த்து நின்ற பாமகவுக்கு ஒரு பெரிய தொகைக்கான டெண்டரை வழங்கி உள்ளார். திமுககாரனுக்கு எதிராகவே கதிர் ஆனந்த் செயல்படுகிறார்.
துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் ரூ.60,000 கோடி சம்பாதித்துள்ளார். இது பற்றிய உண்மைகளை வெளியிடுவேன். அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி இருவரும் ஏலகிரி மலைப் பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் தொடர்பான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன.
அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். நான் அவற்றை வெளியிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது” என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.