வங்கிக் கணக்கில் ரூ.574, கையில் ரூ.30,000..!! வெளியானது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு..!!
பிரதமர் மோடியின் சொத்து மற்றும் கடன்கள் பற்றிய தன்னார்வ அறிவிப்பின் படி, இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் அவரிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கிறது என்பது குறித்து பிஎம் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் பொது வாழ்வில் தங்களுடைய பொறுப்புகளை கடைபிடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தாங்களாக முன்வந்து அவர்களுடைய சொத்துக்கள், கடன்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிப்பார்கள்.
இந்த முறையை அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், தாங்களாக முன்வந்து அவர்களுடைய சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அறிவிக்கும் பழக்கம் தொடங்கியது. அந்தவகையில், பிரதமர் மோடி தாமாக முன்வந்து தாக்கல் செய்துள்ள சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 73 வயதான பிரதமர் மோடியின் பெயரில் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கொள்கை இல்லை, அவரின் வங்கிக் கணக்கின் இருப்பு வெறும் 574 ரூபாய் மட்டுமே உள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் மார்ச் 31, 2023 ஆம் தேதி முடிவில் திரட்டப்பட்ட தரவுகள். பிரதமர் மோடி ஏற்கனவே இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருந்த நிலையில், இது முதிர்ச்சி அடைந்து பிரதமர் அந்த பணத்தை ஒரு நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி வைப்பு நிதியாக உள்ளது.
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் எஸ்பிஐ வங்கி கிளையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சுமார் 2.47 கோடி ரூபாய் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டில், மோடியின் வைப்பு நிதியின் மதிப்பு சுமார் 37 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. மோடி 2021-22ஆம் நிதியாண்டு அறிவிப்பில் காட்டிய 1.89 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுக் கொள்கை அவரது FY22-23 சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்பில் இல்லை.
பிரதமர் மோடி தேசிய சேமிப்புச் சான்றிதழ் வாயிலாக 9.19 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் 14,500 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், மோடியிடம் கடன்களோ, வாகனங்களோ, நிலச் சொத்துகளோ இல்லை. 2020 வரையில், பிரதமர் மோடியிடம் 20,000 ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு பத்திரங்கள் இருந்தன. பெரும்பாலான அரசியல் தலைவர்களைப் போலவே, பிரதமர் மோடியும் பங்குச் சந்தையில் எந்த விதமான முதலீட்டையும் செய்யவில்லை.
பிரதமர் மோடி எந்த சம்பளமும் வாங்காமல், தான் பெறும் முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்கி வருகிறார். அவர் ஒரே ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே பராமரிக்கிறார். அதுவும் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் இருப்பது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக ஆனதில் இருந்து இந்த எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அவரிடம் ரொக்கமாக 30,240 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.