கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்..! "ஆசிரியை கொலை மிருகத்தனமானது" முதல்வர் ஸ்டாலின்...
தஞ்சையில் முன்னாள் காதலனால் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் ரமணி (25). ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். ஆசிரியை ரமணியும் சின்னமனையைச் சேர்ந்த மதன் என்பவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பு மதனின் பெற்றோர் ரமணியை பெண்கேட்டு சென்றுள்ளனர், அதற்கு ரமணியின் பெற்றோர் மறுப்புத்தெரிவித்தையடுத்து, ரமணி மதனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ரமணி மீது ஆத்திரமடைந்த மதன் நேற்று காலை ரமணி பணிபுரியும் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ரமணியை கழுத்து பகுதியில் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ரமணியை மீட்டு மருத்துவமனைக்கு சக ஆசிரியர்கள் அனுப்பியுள்ளனர். அனால் பாதி வழியில் ரமணி உயிரிழந்துள்ளார். கொலையாளி மதனை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ஆறுதலுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார். தஞ்சையில் முன்னாள் காதலனால் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் செய்தி குறிப்பில், "ஆசிரியை ரமணியை இழந்துவிடும் குடும்பத்தாருக்கும், சக ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும் வகுப்பறையில் ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது மிருகத்தனமானது, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை எடுக்கப்படும். குற்றவாளியை போலீசார் கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளது, என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.