பால் விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகை...! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்...!
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது 9% குறைக்கப்பட்டு ரூ.125 கோடி வழங்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்குவது எளிதாகியுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பால் கொள்முதலில் தமிழ்நாடு 36 லட்சம் லிட்டரை கடந்துள்ளது. விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகையாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது 9% குறைக்கப்பட்டு ரூ.125 கோடி வழங்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்குவது எளிதாகியுள்ளது. வட்டியில்லா கடன் வழங்கல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆவினில் பால் கையாளும் திறன் 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் பால் விற்பனை 28% அதிகரித்துள்ளது.
அமுல் நிறுவனம் உள்ளே வருவது விவாதத்திற்கான பொருளே இல்லை, உலகமயமாக்கலுக்கு பின் நம்முடைய பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். பால் கொள்முதலில் பிரச்னை இருக்காது, தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஆவின் கிளைகளை அதிகரிக்க தேவை உள்ளது. ஆவின் நிர்வாகம் பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.