ரூ.2000 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி!. பிரதமருடன் இன்று திமுக எம்பிக்கள் குழு சந்திப்பு!.
Penjal Relief: பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ.2000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை திமுக மூத்த எம்பிக்கள் குழு இன்று சந்திக்க உள்ளது.
பெஞ்சல் புயல் தாக்குதலால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் குறிப்பாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்ததால் பல்வேறு கிராமங்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நேற்று கொடுத்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னதாக பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரூ.2000 கோடியை பேரிடர் மேலாண்மை நிதியை முதல்கட்டமாக உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலியுறுத்தி உள்ளோம்.
புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. வெளியூரில் சென்றுள்ள பிரதமர் டெல்லி திரும்பியதும் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பெஞ்சல் புயல் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் வழங்கிய கோரிக்கை மனுவை திமுகவின் மூத்த எப்பிக்கள் மட்டும் குழுவாக சென்று வழங்குவோம். அநேகமாக நாளை (இன்று) அந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். அதே போன்று ஒன்றிய ஆய்வுக் குழுவும் தமிழ்நாட்டிற்கு நேரில் சென்று பெஞ்சல் புயல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.