FCI: 2024-25-ம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியாக ரூ.10,700 கோடி ஒதுக்கீடு..! மத்திய அரசு ஒப்புதல்
2024-25-ம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியாக ரூ.10,700 கோடியை மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்தது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவை உறுதி செய்யும் இலக்கை எஃப்சிஐ செயல்படுத்தி வருகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியாக ரூ.10,700 கோடியை மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்தது.
மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக இந்திய உணவுக் கழகம் உள்ளது. மத்திய அரசின் உணவுக் கொள்கைகளை செயல்படுத்தும் பொறுப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொள்முதல், சேமித்து வைத்தல், போக்குவரத்து, விநியோகம் ஆகியவற்றை இது மேற்கொள்கிறது. 1965-ம் ஆண்டு 100 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட எஃப்சிஐ கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் இலக்கை மேற்கொண்டுள்ளது.
பெருந்தொற்று காலத்தில் பொது அடைப்பு செயல்பாட்டில் இருந்தபோது, நாட்டுக்கே உணவு அளிக்கும் பொறுப்பை எஃப்சிஐ மேற்கொண்டது. மாநிலங்களுக்கான வருடாந்திர உணவு தானிய ஒதுக்கீடு 600 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 1100 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டது. நாட்டின் உணவு பாதுகாப்பில் முக்கிய தூணாக விளங்கும் எஃப்சிஐ வேளாண் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக உணவு விநியோகச் சங்கிலியை பராமரித்து, அதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வருகிறது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்தியாவின் விவசாயத்தை மேம்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதுடன் மக்கள் எவரும் பட்டினியுடன் உறங்க செல்லக் கூடாது என்பதை உறுதி செய்து வருகிறது.