நோட்..! மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..! மிஸ் பண்ணிடாதீங்க...!
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை பெறும் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தம் 1,000 பேர் (500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஒரு கல்வி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
இத்தேர்வில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் (கொள்குறி வகை) இடம்பெறும். தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் கணிதம் தொடர்பான 60 வினாக்களும், 2-வது தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான 60 வினாக்களும் கேட்கப்படும். முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 2-வது தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும்.
மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.