அப்போ ரூ. 1000 இல்லையா?… அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு!… என்னென்ன பொருட்கள் தெரியுமா?
ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும். அந்தவகையில், கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது. இந்தாண்டும் இதேபோன்ற பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொகுப்பில் பொதுமக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. அது குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அரசாணையில் இல்லை. இருப்பினும், நாளைய தினம் ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவை குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.