மகிழ்ச்சி..! ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பித்து கிடைக்காத பெண்களுக்கு மட்டும்..! அமைச்சர் தகவல்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து கிடைக்காதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது தமிழக மக்களுக்கு தெரியும். 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பயனாளிகள் கடந்த மாதத்தில் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கான காரணம் இறப்பு, பொருளாதார வரம்பு உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு தகுதியற்ற பயனாளிகளை தமிழ்நாடு அரசு நீக்கி இருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சமாக உயர்ந்துள்ளது. மீண்டும் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்; தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய ஒரு கோடியே 55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து கிடைக்காதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவு பேரில் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.