ஸ்மிருதி இரானிக்கு எதிராக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் வதேரா!!
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ராபர்ட் வதேரா போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ”நான் அரசியலில் சேர்ந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தத் தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்ததற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். காந்தி குடும்ப உறுப்பினர் ஒருவர், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
2004, 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், ரேபரேலி எம்பியான சோனியா காந்தி, மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், ரேபரேலியில் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமேதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ராபர்ட் வதேரா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.