கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!
கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவிய காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020 ஏப்ரல் முதல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 2021 செப்டம்பர் முதல் 50% பயணிகளுடனும், 2021 அக்டோபர் முதல் 100% பயணிகளுடனும் பேருந்துகளை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாததால், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை வாகனங்கள் இயக்கப்படவில்லை என அறிக்கை அளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அந்த காலக்கட்டத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், வாகனங்கள் 50% பயணிகளுடனும், 100% பயணிகளுடனும் இயக்க அனுமதித்துள்ளதாக கூறி, வாகன இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை நிராகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
கொரோனா காலத்தில் பேருந்துகளை இயக்காததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், 2021 - 2022 வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார். மேலும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து அளித்த அறிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read More : நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு..!! சிக்கியது யார் தெரியுமா..? மனைவி பரபரப்பு புகார்..!!