ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.! விசாரிக்க சென்ற போலீசாரை துப்பாக்கியால் மிரட்டல்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டு, தனது கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அந்த ராணுவ வீரரை எச்சரிக்க சென்ற போலீசாரை துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கிராமத்தில் 56 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தனது மனைவி(53) மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். அதில் ஒரு மகன் மனவளர்ச்சி குன்றியவராகவும், மற்றொருவர் பார்வையற்றவராகவும் உள்ளார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் பல வேலைகளை செய்து வந்துள்ளார். தற்போது தேன் பெட்டி வியாபாரம் செய்து வரும் அவர், அதில் பெற்ற லாபத்தின் மூலம், வீடு ஒன்றை கட்டி வசதியாக வாழ்ந்து வருகிறார். தேன் பெட்டி வியாபாரம் தொடர்பாக பலருடன் நட்பு பாராட்டி வரும் அவர், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். தனது வியாபாரம் தொடர்பாக அந்த ராணுவ வீரர், அடிக்கடி அந்த பெண் வீட்டிற்கு சென்று வரத் தொடங்கினார். அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சில நாட்கள் தனது வீட்டிற்கு செல்வதையும் அந்த ராணுவ வீரர் தவிர்த்து வந்துள்ளார். சந்தேகம் அடைந்த அந்த மனைவி துப்பு துலக்கியதில், அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அவர் தனது கணவனிடம் கேட்டபொழுது, அந்த பெண்ணுடனான பழக்கத்தை அவர் கைவிட மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆத்திரமடைந்த அவரது மனைவி, திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரிக்க வந்த போலீசாரை, தனது துப்பாக்கியை எடுத்து சுட போவதாக மிரட்டியுள்ளார், அந்த ராணுவ வீரர். அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய அந்த போலீசார், அவரை எச்சரித்துச் சென்றனர்.
இருந்த போதும் மறுநாளும், அவர் தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். கோபமடைந்த ராணுவ வீரரின் மனைவி கிராம மக்களின் உதவியுடன் அவரை தட்டிக் கேட்டபோது, பொதுமக்களுக்கும் அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறுபடியும் இதில் காவல் துறையினர் தலையிட்டு, ராணுவ வீரரை கடுமையாக எச்சரித்து, அவர் அழைத்து வந்த அந்த பெண்ணை அவரது சொந்த இடத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.