"நீதித்துறையை காப்பாற்றுங்கள்" - ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்!
நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்-க்கு கடிதம் எழுதியுள்ளது.
நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி, எம் ஆர் ஷா மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு, இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 21 நீதிபதிகளில் 17 முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளும், 4 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அடங்குவர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "திட்டமிடப்பட்ட அழுத்தம், தவறான தகவல்கள் மற்றும் பொது அவமதிப்பு ஆகியவற்றின் மூலம் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் சில பிரிவினரால் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் குறுகிய அரசியல் நலன்கள், தனிப்பட்ட ஆதாயங்கள் ஆகியவற்றால் உந்தப்பட்டு நீதித்துறை மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகின்றனர்.
நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் நேர்மை மீது சந்தேகங்களை முன்வைப்பதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளை திசை திருப்ப தெளிவான, ந யவஞ்சகமான முறைகளை விமர்சகர்கள் பின்பற்றுகின்றனர். இத்தகைய செயல்கள் நமது நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பது மட்டுமின்றி, சட்டத்தின் பாதுகாவலர்களாகிய நீதிபதிகள் உறுதிமொழி எடுத்துள்ள நேர்மை மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகளுக்கு நேரடி சவால் அளிப்பதாகவும் உள்ளது.
எனவே இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக நீதித்துறை பலப்படுத்தப்பட வேண்டும். நீதித்துறையின் புனிதத்தன்மை, தன்னாட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.