கேரளாவில் மீண்டும் பரவிய "பறவை காய்ச்சல்"..! தொற்று பரவாமல் இருக்க வாத்துகளை அழிக்க முடிவு!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மேலும் தொற்று பரவாமல் இருக்க வாத்துகளை அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கோடை மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்களும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள எடத்துவா மற்றும் செருதானா பஞ்சாயத்தில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இறந்த வாத்துக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சல் பாதிப்புகள் உள்ள பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கட்டனர். இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க, குட்டநாட்டில் உள்ள எடத்துவா, செருதானா, சம்பக்குளம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து வாத்துகளை உடனடியாக அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலையை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடர்பு, அவற்றின் கழிவுகள் அல்லது அசுத்தமான சூழலினால் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மனிதர்கள் இந்த தொற்றினால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மனிதர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால், இறப்பு விகிதம் 60 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மனிதர்களில் H5N1 நோய்த்தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் தசைவலி, பொதுவான காய்ச்சல் போன்ற அறிகுறிகளிலிருந்து கடுமையான சுவாச நோய், நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்பு வரை இருக்கலாம்.