5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சந்திப்பு… சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் என்ன பேசினார்?
பெய்ஜிங்கில் நடந்த சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 23வது சுற்றில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை இன்று சந்தித்தார். ஐந்து வருடங்களில் இரு தரப்புக்கும் இடையிலான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது எல்லை தாண்டிய பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தவும், திபெத், சீனாவுக்கான இந்திய யாத்ரீகர்களின் யாத்திரையை மீண்டும் தொடங்கவும், எல்லை தாண்டிய நதி ஒத்துழைப்பு மற்றும் நாதுலா எல்லை வர்த்தகத்தை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவும் சீனாவும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் பணிகளை தொடர வேண்டும் என இரு தரப்பும் வலியுறுத்தியது. இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த சூழ்நிலையில் இருந்து எல்லைப் பிரச்னையை சரியாகக் கையாள வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில், எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவதற்கும், இருதரப்பு உறவுகளின் ஆரோக்கியமான, நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
2005 ஆம் ஆண்டு எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்ட அரசியல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, எல்லைப் பிரச்சினைக்கு இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நியாயமான தீர்வை எட்டுவதற்கு இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இது தவிர, சிறப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு பொறிமுறையின் கட்டுமானத்தை மேலும் வலுப்படுத்தவும், இராஜதந்திர மற்றும் இராணுவப் பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான சீன-இந்தியா பணி பொறிமுறையை தேவைப்படுத்தவும் இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய சுற்று சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கான நேரம், இராஜதந்திர வழிகள் மூலம் தீர்மானிக்கப்படும்.
மேலும் இரு தரப்பும், சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் பற்றிய விரிவான மற்றும் ஆழமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன, சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நிலையான மற்றும் சுமூகமான சீனா-இந்தியா உறவின் முக்கியத்துவத்தை இந்த சந்திப்பு வலியுறுத்துகிறது.