10 மாதங்கள்; வெளியிடப்படாத தேர்வு முடிவுகள்.! தேர்வாளர்கள் குழப்பம்.! TNPSC-ல் என்ன நடக்கிறது.?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு ஏற்படுத்தப்பட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த ஆணையம் ஒரு தலைவரையும் 13 உறுப்பினர்களையும் கொண்ட தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வந்தது.
இதன் தலைவராக செயல்பட்டு வந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஓய்வு பெற்ற பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதன் உறுப்பினராக இருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் தற்போது டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் காலதாமதம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பத்து மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு இன்னும் முடிவு வெளியாகவில்லை என பலரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் 546 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. 53 ஆயிரம் வேறு இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து பத்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வு எழுதியவர்கள் கடும் விரத்தியில் இருக்கின்றனர். மேலும் டிஎன்பிஎஸ்சி போதுமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் மிகவும் மந்தமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.