சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் 10-ம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம்...!
ஃபெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மகாபலிபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசி வருகிறது. அத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோருக்கு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9-ம் தேதி வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் டிசம்பர் 10-ம் தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.