இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழா...! ரூ.2 லட்சம் வரை பரிசுத்தொகை அறிவிப்பு...!
இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவையொட்டி RBI90 வினாடி வினா போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு அதன் 90-வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த மைல்கல்லை குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இளங்கலை மாணவர்களை இலக்காகக் கொண்ட நாடு தழுவிய பொது அறிவு அடிப்படையிலான வினாடி வினா போட்டியான RBI90Quiz-ஐ வங்கி நடத்துகின்றது.
பல சுற்றுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் மாணவர்கள் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட அணிகளாக பங்கேற்றனர். இதன் இணைய வழிச் சுற்று செப்டம்பர் 19-21, 2024-ல் நடத்தப்பட்டது. இணைய வழிச் சுற்றில் பங்கேற்ற மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவிலான போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநில அளவிலான சுற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 168 மாணவர்கள் (84 அணிகள்) போட்டியிட்டனர். இந்தச் சுற்றில் காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் தருண் ஆர் ஜெயின் மற்றும் அஸ்மித் குமார் சாகூ ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மேலும், தியாகராசர் பொறியியல் கல்லூரி (மதுரை) மற்றும் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி (நாமக்கல்) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கான பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.1 லட்சம் ஆகும். வெற்றி பெற்ற அணி நவம்பர் 25, 2024 அன்று கொச்சியில் நடைபெறவுள்ள மண்டல சுற்றில் போட்டியிடும். தேசிய அளவிலான இறுதிப் போட்டி டிசம்பர் 2024 -ல் மும்பையில் நடைபெறவுள்ளது.