Amit Shah | "இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…" உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.!!
Amit Shah: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்திருக்கிறது . முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இங்கு தேர்தல் நடைபெறுவதற்கான நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இங்கு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(Amit Shah) பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அந்த சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து ராஜஸ்தானில் பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவற்றின் தாக்கம் அடங்குவதற்குள் மதரீதியாக அமித் ஷா பேசியிருப்பதை எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.