மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு..!
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016'-ன் கீழ், மாற்றுத்திறனாளிகளின் பிரிவுகள் 3-ல் இருந்து 5-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
குடிமைப் பணிகள் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை, குடிமைப் பணிகள் தேர்வில் தகுதிபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு ஹோம் கேடர் தேர்வுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, உதவியாளர் உதவித் தொகை உயர்வு என அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ளது.
மேலும் நீண்ட ஆண்டுகளாக காலியாக இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சுமார் 15,000 பணியிடங்கள் அரசாங்கத்தின் சிறப்பு இயக்கத்தின் கீழ் நிரப்பப்பட்டன. மாற்றுத் திறனாளிகளை ‘ஊனமுற்றோர்’ என்பதற்குப் பதிலாக 'தெய்வீக பிறவிகள்’ என்று அழைக்க வேண்டும் என ஒரு பெயரை வழங்கியது பிரதமர் மோடியின் யோசனையாகும் என கூறினார்.