இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் 5 பேர் பலி..!! - இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்
காஸாவில் வான்வழி தாக்குதல் மூலம் பத்திரிகையாளர்கள் 5 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களால் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அல்-கிஸா டிவி நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் அமைப்பின் நிருபர் ஹனீன் பரூத், சாத் அல்-சகீப் செய்தி நிறுவனத்தின் அப்துல் ரகுமான் அல்-தனானி மற்றும் சுயாதீன நிருபராகப் பணியாற்றும் நாதியா அல்-சயீத் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீன் ஊடக அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து நடத்தப்படும் இத்தகையக் கொடுமைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தாக்குதல்கள் பாலஸ்தீன ஊடகவியலாளர்களை அச்சுறுத்தாது என்றும், அவர்கள் இஸ்ரேலின் குற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு குறிவைத்ததையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. காஸா பகுதியில் செய்தியாளர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச ஊடகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற பழிவாங்கும் நோக்கத்திலான கொலைகளுக்கு பாசிச இஸ்ரேல் அரசு பொறுபேற்க வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்குமாறும், இஸ்ரேலின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த அவர்களுடன் ஒற்றுமையாக நிற்குமாறும் சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
Read more ; எந்த வீட்டில் கூட சமையல் அறை கிடையாது..!! இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா? – எங்க இருக்கு தெரியுமா?