பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்...!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.