வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவிதுள்ளார். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 5 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நெற்பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீடு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.