குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்!! கேரள அரசு அறிவிப்பு..
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனால், தீ கட்டிடம் முழுவதும் பரவி, புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீயில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தொழிலாளர்கள் பலர் தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சிலர் தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என தெரிய வந்த நிலையில் இதில், கேரளாவை சேர்ந்த 19 பேர் இதுவரை உயிரிழந்ததாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்தது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்கிறார். இறந்தோர் உடல்களை கேரளா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வீணா ஜார்ஜ் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
Read more ; குவைத் தீவிபத்து..!! தமிழர்களின் நிலை என்ன..? 5 பேர் பலி..? அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!