இவர்களுக்கு தலா ரூ.12500 நிவாரணம்!… தமிழக அரசு திட்டம்!
எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12500 நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்தது. அது மழைநீருடன் கலந்து குடியிருப்புகளில் வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து விசாரணை செய்தது.
நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் விசாரித்தனர். 4 முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று ஐந்தாவது முறையாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், எண்ணெய் நிறுவனங்கள் (சிபிசிஎல்), காட்டுக்குப்பம் மீனவர்கள் சார்பில் அனைத்து வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதிட்டனர். தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் வாதிடுகையில், இதுவரை 393.7 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது. புலிகாட் ஏரி பகுதிகளில் ஆய்வு செய்ததில் தார் பந்து இல்லை, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறைந்த அளவில் தார் பந்து இருந்தது, அதையும் அகற்றிவிட்டோம்.
வனத்துறை ஆய்வில் எந்த ஒரு பறவையும் இறக்கவில்லை என அறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பறவைகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஐஐடி நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களது அறிக்கை விரைவில் கிடைக்கும். அவர்களுடன் கோவாவில் உள்ள தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனமும் ஆய்வு செய்து வருகிறது. இயல்பு நிலைக்கு மாற சிறிது காலம் ஆகும் என்றார். தமிழக அரசு மீன்வள துறை சார்பில், இந்த பேரிடருக்கு சிபிசிஎல்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. எண்ணெய் கழிவால் 2,301 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ.12,500 வழங்க திட்டமிட்டு உள்ளோம்.