அயோத்தி ராமர் கோயிலின் நினைவு தபால் தலைகள் வெளியீடு!… மதிக்கும் காவியமாக திகழ்கிறது!… பிரதமர் பேச்சு!
அயோத்தி ராமர் கோயிலின் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் இருந்து ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தபால் தலைகள் கொண்ட புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அயோத்தியில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், துறவிகள் என 7,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகள் அடங்கிய ஆல்பத்தையும் அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், தபால் தலைகள் என்பது வெறும் தபால் தலைகள் அல்ல. காவியங்கள், சிறந்த கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவமாகும். ராமர்,சீதை மற்றும் ராமாயணம் ஆகியவை சமூகம், ஜாதி, மதம், பிராந்தியங்களை கடந்து ஒவ்வொரு மக்களையும் இணைக்கும் சக்தியாக உள்ளது. மிகவும் கடினமான சமயங்களில் அன்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. இதனால்தான் ராமாயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து அனைவரும் மதிக்கும் காவியமாக திகழ்கிறது. ஏராளமான நாடுகள் ராமரின் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன. பல்வேறு நாகரிகங்களுக்கு மத்தியில் ராமாயணம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.