தமிழக மீனவர்கள் 19 பேர் விடுவிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லைத்தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 19 பேரை மட்டும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதேபோல் காரைக்காலை சேர்ந்த செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல் மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி, தரங்கம்பாடி சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 15 பேர், கடந்த 6-ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம், 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் படகோட்டிகள் 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 7ந் தேதி விசாரிக்கப்படுகிறது.