ஆந்திராவில் ஆட்சி மாற்றம்..!! அரியணை ஏறும் சந்திரபாபு நாயுடு..!!
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே, இன்று லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதில் ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பிரதான போட்டி இவர்களுக்கு இடையே தான் இருக்கிறது. இவை தவிரக் காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளது. ஆந்திராவில் கடந்த தேர்தலில் ஜெகன் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151இல் வென்று அசுர பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைத்த போதிலும் இந்த முறை அதே வெற்றியைப் பெறச் சாத்தியம் குறைவே என்றே கூறப்படுகிறது. இதுவரை வந்த எக்ஸிட் போல் முடிவுகளிலும் கூட பெரும்பாலானவற்றில் ஜெகன் கட்சி தோல்வியைத் தழுவும் என்றும் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராவார் என்றே கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 13ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க தேவையான 88 இடங்களைக் கடந்து 113 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெறும் 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பவன் கல்யாணின் ஜன சேனா 17 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஆட்சியமைப்பதற்காக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Read More : Lok Sabha Election Results 2024 | வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை..!!