தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்..!! கொட்டித் தீர்க்கப்போகும் மிக கனமழை..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
ஜூலை முதல் வாரம் வரை தமிழ்நாட்டில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%-ஐ கொடுக்கும். எனவே, இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. ஆனால், தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களிலும் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, குமரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் நீலகிரி, கோவையில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.